தமிழில் புதைபுதிர் குறுக்கெழுத்து

ஆசிரியர் - S.பார்த்தசாரதி

குறுக்கெழுத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதை Quick அல்லது Easy crossword (எளிதான குறுக்கெழுத்து) என்று கூறுவார்கள்.  மற்றது, திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Crossword (மறைபுதிரான குறுக்கெழுத்து) என்று கூறுகிறார்கள். முதல் வகை நீச்சல் குளத்தில் நீந்துவது  என்றால் இரண்டாம் வகை கடலில் நீந்துவது. இரண்டு வகையிலுமே குறிப்பு மற்றும் அதன் விடையின் எழுத்துக்களின் எண்ணிக்கை கொடுக்கப் பட்டிருக்கும். நல்ல குறுக்கெழுத்துக்கு இன்னொரு அடையாளமும் உண்டு. குறுக்கெழுத்தின் கட்டங்களை 180  டிகிரி திருப்பினாலும் ஒரே மாதிரி இருக்கும் (symmetry).

தமிழ் பத்திரிகைகளிலும் செய்தித் தாள்களிலும் பெரும்பாலும் முதல் வகை மட்டுமே காண முடிகிறது அம்முறையில் பொது அறிவைச் சோதிக்கும் வண்ணம் புதிர்க் கேள்விகள் அமையும். உதாரணமாக, ` தேவ கலக நாயகர் (4) என்றால் அனேகமாக விடை நாரதர் என்றிருக்கும். இது நேரடி முறை. இதே விடை வரும் மறைபுதிர் குறிப்பு எப்படி இருக்கும்? கலக நாயகர் நார் தர கலைந்தார் (4) அல்லது ரங்கநாதர் குறைந்து கலந்ததில் கிடைத்த கலக நாயகர் (4). ஒரு தமிழ்ப்பத்திரிகை மட்டுமே மறைபுதிரான குறுக்கெழுத்துக்களை கடந்த 10 வருடங்களாக வெளியிடுகிறது. அது வட அமெரிக்காவிலிருந்து வெளியாகும் தென்றல் மாத இத ழ்.

ஆங்கில மறைபுதிரான குறுக்கெழுத்துகளுக்கு ஈடாக தமிழிலும் புதிர்கள் அமைக்க முடியும் என செய்து காட்டியவர், காட்டி வருபவர் என் குரு திரு வாஞ்சிநாதன். தென்றல் மாத இதழில் திரு வாஞ்சிநாதன் அமைக்கும் ‘தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்’ பகுதிக்கு நிறைய ரசிகர்கள் உண்டூ. பல ஆண்டுகளாக ஆங்கில குறுக்கெழுத்துக்களின் விடை கண்டுபிடித்து வரும்  நானும் என் மனைவி அம்ருதாவும் கலிஃபோர்னியாவில் ஜனவரி 2009ல் ‘தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்’ பார்த்தவுடன் அதன் தீவிர ரசிகர்களானோம். சென்னை வந்தபின் இணைய தளத்தில் பழைய தென்றல் இதழ்களைத் தேடி ஒவ்வொரு புதிரையும் அவிழ்த்து மகிழ்ந்தோம். பின்னர் திரு வாஞ்சிநாதனை சந்தித்தோம். அவர் அளித்த ஊக்கத்தால் ஏப்ரல் 2009 முதல் நாங்களும் புதிர்களை ஒவ்வொரு மாதமும் இணைய தளத்தில் அமைத்து வருகிறோம். யாம் பெற்ற இன்பம் எல்லோரும் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் மறைபுதிரான குறுக்கெழுத்துப் பற்றி விளக்கமாக இதை எழுதுகிறேன். இக்கட்டுரை படித்தபின் மூளைக்கு வேலை கொடுக்கும் புதிரான குறுக்கெழுத்துப் புதிர்களில் உங்களுக்கு ஆர்வம் வரும் என நம்புகிறேன்

எல்லா மறைபுதிரான குறுக்கெழுத்துக் குறிப்புகளிலுமே இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று அக்கு என்றால் இன்னொன்று ஆணி. ஒன்று விடையை நோக்கி கைகாட்டும். மற்றொரு பகுதியில் விடையை அறிவதற்கு வழிமுறைகள் சொல்லப் பட்டிருக்கும். உதாரணமாக கலக நாயகர் நார் தர கலைந்தார் (4) என்ற குறிப்பில் ‘கலக நாயகர்’ எனும் சொற்கள் விடையை நோக்கி கைகாட்டுகிறது. ‘நார் தர கலைந்தார்’ எனும் சொற்கள் விடை வரும் விதத்தை காட்டுகின்றன.

மறைபுதிரான குறுக்கெழுத்துக் குறிப்புகளில் பல உத்திகள் கையாளப் படுகின்றன. அவற்றில் சில இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

ANAGRAM (விடையின் சொற்களை வேறு வரிசைப் படுத்துதல்)

நாம் முதலில் காண்பது ANAGRAM. Anagram என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ்ச் சொல் இல்லாததால் ஏனக்ரம் என்றே அழைக்கலாம். ஒரு வகையில் இதுவும் சரியே. ஒரு சொல்லின் எழுத்துக்களை மாற்றியமைத்து உருவாக்கும் மற்றொரு சொல்லே Anagram ஆகும். அதாவது எழுத்துக்களை வேறு வரிசைப் படுத்த வேண்டும். வேறு வரிசை என்பதற்கு ஏன கிரமம் என்பது சரியானபடியால் ஏனக்ரம் எனும் புதிய வார்த்தையை ஏற்கலாம். சில குறிப்புகள் இதை தெளிவாக்கும்.

குளறுபடி மிகும் ஆட்டம் (3) விடை-கும்மி (மிகும் என்பதன் ஏனக்ரம்)

தீபாவளிக்கு வாங்குவது புடைத்து மாறுபடும் (4) விடை- புத்துடை (புடைத்து என்பதன் ஏனக்ரம்)

ஒழுங்குகெட்ட கந்தலை உதறிவிடு (4) விடை- கலைந்த (கந்தலை என்பதன் ஏனக்ரம்)

காரி பதம் படிக்க வடமொழிக்காவியம் (5) விடை- காதம்பரி (காரி பதம் என்பதன் ஏனக்ரம்)

ஒரு நூல் வாசம் கருதி மறுபதிப்பு (6)  விடை- திருவாசகம் (வாசம் கருதி என்பதன் ஏனக்ரம்)

மாருதி கத்த கலைந்து சரியாக (6) விடை- திருத்தமாக (மாருதி கத்த என்பதன் ஏனக்ரம்)

CHARADES (விடையின்  சொற்களுக்கு வேறு சொற்கள் உபயோகிப்பது)

ஆங்கில குறுக்கெழுத்துக் குறிப்புகளில் இவ்வகை குறிப்பகள் மிக அதிகம். இந்த வகை குறிப்புகளில் விடையை இரண்டு அல்லது மூன்றாக வெட்டி ஒவ்வொன்றுக்கும் ஒத்த கருத்துள்ள வேறு சொல்லை உபயோகிப்போம். சில குறிப்புகள் இதை தெளிவாக்கும்.

புத்திசாலிக்கு வெட்டக் கூடிய நிலவு (4) விடை- கூர்மதி (வெட்டக் கூடிய என்பதன் வேறு சொல் கூர், நிலவு என்பதன் வேறு சொல் மதி)

தொழிற்சாலை மேலே உலவும் இனிய கரம் (5) விடை- கரும்புகை (இனிய என்பதன் வேறு சொல் கரும்பு, கரம் என்பதன் வேறு சொல் கை)

அரசன் கோல் ராமர் வில் (5) விடை- கோதண்டம் (அரசன் என்பதன் வேறு சொல் கோ, கோல் என்பதன் வேறு சொல் தண்டம்)

புத்தகம் பார்த்து தைக்க உதவும் (2,3) விடை- நூல் கண்டு (புத்தகம் என்பதன் வேறு சொல் நூல், பார்த்து என்பதன் வேறு சொல் கண்டு)

DOUBLE DEFINITIONS (சிலேடை- ஒரே விடை வரும் இரு பொருள் கொண்ட சொற்தொடர்கள்)

இந்த வகை குறிப்புகள் எளிதான குறுக்கெழுத்து மாதிரி. ஆனால் ஒரு குறிப்பிற்கு பதில் ஒரே அர்த்தம் கொண்டஇரண்டு சொற்தொடர்கள் இருக்கும். சில குறிப்புகள் இதை தெளிவாக்கும். விடைகளுக்கு விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்.

விளக்கிலிருக்கும் உண்மையை மாற்றிச் சொல் (2) விடை- திரி

துணி காய்க்கும் தாவரம்? (2) விடை- கொடி

அந்த ஆளைச் சமைக்க ஒரு காய் (3) விடை- அவரை

சிறிய தெருவை வியாபாரம் செய்யுமிடம் (3) விடை- சந்தை

தாயா? அந்தத் தூளா? (4) விடை- அம்மாவா

தமிழில் சிலேடைப் பிரயோகம் கடி ஜோக்குகளில் அதிகமாக உபயோ கிக்கப் படுகின்றன. ஒரு கடி ஜோக்கை குறுக்கெழுத்துக் குறிப்பாக மாற்றுவோமா?

என்னப்பா இது? கல்யாணத்துக்கு பொண்ணு பாக்கக் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னே! இப்பப் பாத்தா கல்லறைக்குக் கூட்டிட்டு வந்திருக்க?' 
"
நீங்கதானே ஐயா அடக்கமான பொண்ணா இருக்கணும்னு சொன்னீங்க?

இதற்கான குறுக்கெழுத்துக்  குறிப்பு கீழே.

கல்லறையில் புதைத்தல் பெண்ணுக்கு நல்லது (5) விடை- அடக்கம்

சிலேடைப் புலி கி.வா.ஜகந்நாதன்  வேறு சில நண்பர்களுடன் காரில் போய்க் கொண்டிருந்தார். கார் வழியில் நின்று விட்டது. கி.வா.ஜ முதியவர் என்பதால் அவரை மட்டும் காரிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள் மற்றவர்கள். ஆனால், அதை ஏற்காமல் தாமும் கீழே இறங்கிக் காரைத் தள்ளியவாறே கி.வா.. சொன்னது. "என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?"

இந்த சம்பவத்தை குறுக்கெழுத்துக் குறிப்பாக் மாற்றுவோமா?

வண்டி நின்று போனால் உதவாத முதியவர் (6) விடை- தள்ளாதவர்

HIDDEN WORDS (விடை குறிப்பின் உள்ளேயே ஒளிந்திருக்கும்)

சிறு வயதில் விளையாடிய சொல் விளையாட்டு நினைவிற்கு வருகிறது. ‘ராமன் காட்டுக்குப் போனான்.’ இதில் இருக்கும் கிரிக்கெட் வீரர் யார்சொற்தொடரின் உள்ளேயே இருக்கும் அவர் பெயர் மன்காட். (50களில் வினு மன்காட், 70களில் அவர் மகன் அஷோக் மன்காட் இருவரும் இந்தியாவிற்கு ஆடியுள்ளனர்) குறுக்கெழுத்து உத்திகளிலேயே மிக எளிதானது இதுதான். சில குறிப்புகள் இதை தெளிவாக்கும். விடைகளுக்கு விளக்கம் தேவையில்லை.

அப்பா வைதாலும் ஒளிந்திருக்கும் மங்கை (2) விடை - பாவை

கலிங்கர் வம்சத்தில் தலைக்கனம் (4) விடை - கர்வம்

பக்காத்திருடன் அணைப்பில் கொஞ்சகாலம் பொறு (4) விடை - காத்திரு

பூ வாசம் பங்கிட்டுக் கொண்டது (5) விடை சம்பங்கி

இதில் சிறிது கடினமான வகைக் குறிப்பும் உண்டு. உள்ளேயே இருந்தாலும் அடுத்தடுத்த எழுத்துகளாக இல்லாமல் அமைந்திருக்கும் குறிப்பு இதோ.

உறவு கொள்ளுதல் விட்டு விட்டு சாவார் காதலில் (4) சாவார் காதலில்’ என்ற சொற்றொடரில் 1-வது, 3-வது, 5-வது, 7-வது, எழுத்துகளை சேர்த்தால் கிடைக்கும் விடை ‘சார்தல்’.

 

SPLIT WORDS (விடையின்  சொற்களுக்கு வேறு சொற்கள் ஒன்றுக்குள் ஒன்றாக உபயோகிப்பது)

நாம் முன்னரே பார்த்த Charades என்பதற்கும் இந்த Split words என்னும் உத்திக்கும் அதிக வேறுபாடு இல்லை. முன்னதில் விடையை இரண்டு அல்லது மூன்றாக வெட்டி ஒவ்வொன்றுக்கும் ஒத்த கருத்துள்ள வேறு சொல்லை உபயோகிப்போம். அவை வரிசையாக வரும். இந்த உத்தியில் அவை ஒன்றுக்குள் ஒன்றாக வரும். விளக்கத்துடன் சில குறிப்புகள் இதை தெளிவாக்கும்.

சூரியன் ஸ்வரம் உள்ளே, கணவன் வெளியே (3) ஸ்வரம் அல்லது சுரம் என்பது ச,ரி,,,,,நி இவற்றில் ஒன்றைக் குறிக்கும். விடை- -ரி-தி (ஸ்வரம் என்பத ற்கு ரி, கணவன் என்பதன் வேறு சொல் பதி)

ஒரே வீட்டில் வாழ்வோர் ராசியில் கடைசி வீடு (5) கடைசி வீடு என்பது டு, ராசி என்பது எந்த ராசியின் பெயராகவும் இருக்கலாம். ஆனால் இங்கு பொருந்துவது கும்பம் மட்டுமே. விடை- கு-டு-ம்பம்

ரச நுழைவால் மகனுக்குப் பிறந்தவன் திறை வாங்குவான் (5) மகனுக்குப் பிறந்தவன் பேரன். ரச நுழைவால் என்றிருப்பதால் பேரன் உள்ளே ரச சேர்த்து பேர-ரச-ன். என்ற விடை கிடைக்கும்

எண்ணெய்க்காரன் உபகரணத்தில் வால் திரும்பி நுழைத்தால் ஊரில் மரியாதை (5) எண்ணெய்க்காரன் உபகரணம் செக்கு. அதன் உள்ளே ல்வா (வால் திரும்பி) சேர்த்து செ-ல்வா-க்கு. என்ற விடை கிடைக்கும்

 

DELETIONS (விடையின்  சொற்களின் எழுத்து(கள்) நீக்குவது)

இது வரை பார்த்த எல்லா வகைக் குறிப்புகளிலுமே இந்த உத்தி பயன்படும். விளக்கத்துடன் சில குறிப்புகள் இதை தெளிவாக்கும்.

தில்லைக்கடவுள் மன்னரல்ல செல் (2) தில்லைக்கடவுள் நடராஜர். மன்னரல்ல என்றிருப்பதால் ராஜர் நீக்கியபின் கிடைக்கும் விடை நட.

முடிவு தெரியா குற்றமற்றவர் தந்தை (3) குற்றமற்றவர் அப்பாவி. முடிவு தெரியா என்றிருப்பதால் கடைசி எழுத்து நீக்கியபின் கிடைக்கும் விடைஅப்பா.

அடங்கா மக்கு அங்கா போயிற்று, வளை (4) அடங்கா மக்கு என்னும் சொற்றொடரில் ‘அங்கா’ நீக்கியபின் கிடைக்கும் விடைமடக்கு.

தலை நடுவே காலி அணை (2) தலை என்பதன் வேறு சொல் மண்டை. நடுவே காலி என்றிருப்பதால் நடு எழுத்து நீக்கியபின் கிடைக்கும் விடை மடை.

STRAIGHT CLUES (நேரடிக் குறிப்புகள்)

புதிரான குறுக்கெழுத்துக்களின் வழி ரஜினி மாதிரி தனி வழி. நேரடிக் குறிப்புகளிலும் ஒரு பஞ்ச் இருக்கும். அல்லது  பழமொழிகள், கவி அல்லது எழுத்தாளரின் வரிகளின் அடிப்படையில் அமைக்கப் பட்டிருக்கும். விளக்கத்துடன் சில குறிப்புகள் இதை தெளிவாக்கும்.

மூட்டையாய்க் கட்டப்படும் பொய் (3) - பொய் என்பதை புளுகு முட்டை என்று சொல்வதனால் கிடைக்கும்  விடை புளுகு

சாவி இல்லாத கிறித்தவர்க்குப் போதிக்கப்படுவது? (6) - கிறித்தவ மதத்தில் கூறப்படும் ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்ற சொற்றொடரிலிருந்து கிடைக்கும் விடை தட்டுங்கள்

ராமேசுவரத்திற்கு முன் வரும் புனிதத் தலம்?(2) - புனிதத் தலம் என்று சொல்லும்போது காசி, ராமேஸ்வரம் சேர்த்து சொல்வதால் கிடைக்கும் விடை காசி

முண்டாசுக் கவியின் ஜாதிப் பறவைகளில் முதலாவது (3)  - முண்டாசுக் கவி என்பது பாரதியாரைக் குறிக்கும். அவர் பாடல் ஒன்றில் 'எங்கள் ஜாதி' என இரு பறவைகள் குறிப்பிடப் பட்டுள்ளனஅவற்றுள் முதலாவது. காக்கை எனபதால் விடை காக்கை

சூரியன் மேற்கில் மறைகிறான். இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு உண்மை. இதை குறுக்கெழுத்துப் புதிர் குறிப்பாக எப்படிக் கொடுத்தால் மூளைக்கு வேலை கிடைக்கும் என்பதற்கு என் குரு திரு வாஞ்சிநாதன் அவர்கள் உருவாக்கிய குறிப்பு இதோ.

ரவி அந்தப் பக்கம் காணாமல் போனான் (3) விடை மேற்கு

COMBINATIONS (வெவ்வேறு உத்திகள் இணைந்த குறிப்புகள்)

விருந்திற்கு எல்லா சுவைகளும் தேவை. அதுபோல் நல்ல குறுக்கெழுத்துக்களை சுவாரசியமாக ஆக்குவதே வெவ்வேறு உத்திகள் கலப்பதுதான். விளக்கத்துடன் சில உதாரணங்களைப் பார்ப்போமா?

குபேரா, வந்தனம் தலைகளில்லாமல் அளவற்ற மகிழ்ச்சி அடைவாய் (6) குபேரா, வந்தனம் இந்த இரண்டு சொறகளின் முதலெழுத்துக்களை நீக்கியபின் மிஞ்சிய எழுத்துக்களை வேறு வரிசைப் படுத்தினால் (ஏனக்ரம்) கிடைக்கும் விடை பேரானந்தம்

புள்ளிகளை இணைப்பது பங்கம் சேரக் கொடுஞ்சினம் (6) புள்ளிகளை இணைப்பது கோடு. இந்த சொல்லுடன் பங்கம் சேர்த்து வேறு வரிசைப் படுத்தினால் (ஏனக்ரம்) கிடைக்கும் விடை கடுங்கோபம்

நெருப்பு வாங்குதலை ஒழித்தால் கெடுதல் (3) நெருப்புக்கு வேறு சொல் தீ. ‘வாங்குதலை ஒழித்தால்’ என்பதன் அர்த்தம் ‘வாங்கு என்ற சொல்லின் முதலெழுத்தை நீக்கினால்’. இதில் கிடைப்பது 'ங்கு'. சேர்த்தால் கிடைக்கும் விடை - தீங்கு

மனைவி இடையொடியச் சேர்த்த அரேபியப் பணம் மொட்டாகவே இருக்கும் நிலை (5) ‘மனைவி இடையொடிய’ என்பதன் அர்த்தம் ‘மனைவி என்ற சொல்லின் இடையெழுத்து (நடு எழுத்து) நீக்க வேண்டும்’. இதில் கிடைப்பது ' மவி '. இதனுடன் அரேபியப் பணமான ரியால் சேர்த்து கலந்தால் கிடைக்கும் விடை - விரியாமல்

முதல் குறுக்கெழுத்துப் புதிர் பார்க்குமுன் குறுக்கெழுத்து அமைப்பாளர்கள் செய்யும் சில வார்த்தை ஜாலங்களைப் பார்ப்போமா?

தலையிழந்து என்றால் முதலெழுத்தை நீக்க வேண்டும். அதே போல் இடையிழந்து என்றால் நடு எழுத்தை நீக்க வேண்டும். கடையிழந்து என்றால் கடைசி எழுத்தை நீக்க வேண்டும்.

குறைந்து என்றிருந்தால் அந்த வார்த்தையிலோ அதன் மாற்றுச் சொல்லிலோ எழுத்தை நீக்க வேண்டும்.

ஆதி என்பது முதலெழுத்தையும், அந்தம் என்பது கடைசி எழுத்தையும் குறிக்கும். அந்தாதி என்பது கடைசி, முதல் இரணடெழுத்துக்களையுமே குறிக்கும்.( உதாரணம்: ருக்கு அந்தாதி பாடும் ஆசிரியர் (2). விடை -   குரு)

உயிர் என்பது அ, , ... என்னும் 12 உயிரெழுத்துக்களில் ஒன்றைக் குறிக்கும். அதுபோல் மெய் என்பது க்,ங்,ச்என்னும் 18 மெய்யெழுத்துக்களில் ஒன்றைக்  குறிக்கும்.

வள்ளல் என்பது 12 வள்ளல்களின் பெயர்களில் ஒன்றைக்  குறிக்கும். ராசி, மாதம், நட்சத்திரம்,  கிரகம், கண்டம், ஸ்வரம், காய், பழம் - இந்த பெயர்களில் ஏதாவது குறிப்பில் இருக்கலாம்.

பழமொழிகள் (உதாரணம்: பத்தும் செய்யும் செல்வம்(3). விடை - பணம்), இரட்டைக்கிளவி (உதாரணம்: லட்சுமி இரண்டாகத் தெரியாமல் முழிக்கும் விதம் (4) விடை - திருதிரு), வழக்கத்திலிருக்கும் சொற்-தொடர்கள் இவையெல்லாமே குறுக்கெழுத்து அமைப்பாளர்கள் உபயோகிக்கும் ஆயுதங்கள். பலரும் அறிந்த ஒரு திருக்குறள் ‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்’. இக்குறளை குறுககெழுத்துக் குறிப்பாக மாற்றினால் வருவது இதோ:- உயிருடன் இருக்கும்போது முடிதுறக்க விரும்பாதது (5). விடை கவரிமான்.

தண்ணீருக்கு வெளியிலிருந்து நிறைய பேசி விட்டோம். தண்ணீரில் இறங்குவோமா? நீங்கள் அவிழ்க்கப் போகும் முதல் குறுக்கெழுத்துப் புதிர் அபாகு - 1 (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - 1) இதோ.

அபாகு - 1

(அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - 1)

 

1

 

2

 

3

 

4

 

 

5

 

 

 

 

 

6

 

 

 

 

 

 

 

 

 

 

7

 

 

 

8

 

 

9

 

 

 

 

10

 

 

 

 

 

11

 

 

 

 

 

12

 

 

 

 

 

 

 

13

 

 

 

14

15

 

16

 

 

 

 

 

 

17

 

 

 

 

 

 

 

குறுக்காக

3 ராணி அதை முதலில் அனுபவி (3)

5 கவிழ்ந்தாலும் விழ மாட்டான் தெனாலி ராமன்  (5)

6 லிபியா முதல் இலங்கை முனை மாற்றி ஆண் கட்டுவது (2)

7 அரும்பத விளக்கத்தில் அரசியல்வாதி நாடுவது (3)

8 உயிரில்லாமல் அங்கு பிடிவாதம் கலந்து கட்டுப்படும் (5)

11 பெண்ணைப்பெற்றவர் சீரிய சைவர். மெய்யிழந்து பெண்ணுக்கு செய்வார் (5) 

12 மனதுக்கு பொன் செய்யும் மருந்து இன்னும் வேண்டாம் (3)

14 சிவனை வணங்குகின்ற எதிரி திட்டு (2)

16 பாட்டினால் மரமாக மாற்றி மாட்டில் எடுத்து விவரம் தெரியாதவனாக (5)

17 திருடன் தலை சிக்கிய அங்கமா? சிக்கிய திருடனா (3)                       

 

நெடுக்காக

1 கஷ்டப்பட்டவர் முதலில் தனக்கு கொச்சையாக பொருள் கொடுத்து பணம் வாங்கியவர் (6)

2 கட்டம் குறைந்து பானை (3)

3 பிடிவாதம் விட்டது பாதி கலந்த நட்சத்திரம் (5)

4 மடிசஞ்சி கையில் முடி (2)

9 மாதம் இல்லா சிக்கல் குத்துமா? ஏரி நீரின் ஆழத்தைக் காட்டும் (6)

10 சேவகனா? ஸ்வரம் சேர்த்து நகைப்பாயா? (5)

13 உயிரதில் மாறி மாறி வந்த கருவி (3)

15 சூசை கையில் ஜாடை காட்டு (2)

 (எப்படி விடை காண்பது என் றறிய அடுத்த பக்கம் பார்க்கவும்)

அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 1 - எப்படி விடை காண்பது?

 

குறுக்காக

3 ராணி அதை முதலில் அனுபவி (3)

விடை. ராணி என்பதன் வேறு சொல்.

(அதை முதலில்) + அனுபவி என்பதன் வேறு சொல்

 

5 கவிழ்ந்தாலும் விழ மாட்டான் தெனாலி ராமன்  (5)

விடை. தெனாலி ராமன் (வகித்த பதவி).

திரும்பிப் படித்தாலும் அதே விடை வரும் சொல் (கவிழ்ந்தாலும் விழ மாட்டான்)

 

6 லிபியா முதல் இலங்கை முனை மாற்றி ஆண் கட்டுவது (2)

விடை. ஆண் கட்டுவது (ஓர் ஆடை)

லி (லிபியா முதல்)+ கை (இலங்கை முனை)

 

7 அரும்பத விளக்கத்தில் அரசியல்வாதி நாடுவது (3)

விடை குறிப்பின் உள்ளேயே உள்ளது

 

8 உயிரில்லாமல் அங்கு பிடிவாதம் கலந்து கட்டுப்படும் (5)

விடை. கட்டுப்படும் என்பதன் வேறு சொல்.

ங்கு (உயிரில்லாமல் அங்கு)+ பிடிவாதம் என்பதன் வேறு சொல்

 

11 பெண்ணைப்பெற்றவர் சீரிய சைவர். மெய்யிழந்து பெண்ணுக்கு செய்வார் (5) 

விடை. பெண்ணைப்பெற்றவர் பெண்ணுக்கு செய் வது.

மெய்யெழுத்து இல்லாமல் ‘சீரிய சைவர்’.

 

12 மனதுக்கு பொன் செய்யும் மருந்து இன்னும் வேண்டாம் (3)

விடை. இன்னும் வேண்டாம் என்பதன் வேறு சொல்.

ஒரு பழமொழியில் விளைந்த குறிப்பு.

 

14 சிவனை வணங்குகின்ற எதிரி திட்டு (2)

விடை. திட்டு என்பதன் வேறு சொல்.

சிவனை வணங்குகின்ற’ என்பதன் வேறு சொல் திரும்பியுள்ளது (எதிரி).

 

16 பாட்டினால் மரமாக மாற்றி மாட்டில் எடுத்து விவரம் தெரியாதவனாக (5)

விடை. ‘விவரம் தெரியாதவனாக’ என்பதன் வேறு சொல்.

பாட்டினால் மரமாக’  என்பதில் ‘மாட்டில்’ என்பதை நீக்கவும்

 

17 திருடன் தலை சிக்கிய அங்கமா? சிக்கிய திருடனா? (3)        

விடை. ‘சிக்கிய திருடனா’ என்பதன் வேறு சொல்.

அங்கமா என்பதன் வேறு சொல் (ஒரு அங்கத்தின் பெயர்). அதன் உள்ளேதி (திருடன் தலை சிக்கிய)

 

 

நெடுக்காக

1 கஷ்டப்பட்டவர் முதலில் தனக்கு கொச்சையாக பொருள் கொடுத்து பணம் வாங்கியவர் (6)

விடை. ‘கஷ்டப்பட்டவர்’ என்பதன் வேறு சொல்.

(முதலில் தனக்கு)+ பொருள் கொடுத்து பணம் வாங்கியவர் என்பதன் வேறு சொல். ‘கொச்சையாக’ என்றிருப்பதை கவனிக்கவும்.

 

2 கட்டம் குறைந்து பானை (3)

விடை. ‘பானை’ என்பதன் வேறு சொல்.

கட்டம்’ என்பதில் எழுத்து நீக்க வேண்டும்.

 

3 பிடிவாதம் விட்டது பாதி கலந்த நட்சத்திரம் (5)

விடை. ‘நட்சத்திரம்’ (ஒரு நட்சத்திரத்தின் பெயர்)

விட் (விட்டது பாதி)+பிடிவாதம்’ என்பதன் வேறு சொல்.

 

4 மடிசஞ்சி கையில் முடி (2)

விடை குறிப்பின் உள்ளேயே உள்ளது

 

9 மாதம் இல்லா சிக்கல் குத்துமா? ஏரி நீரின் ஆழத்தைக் காட்டும் (6)

விடை. ஏரி நீரின் ஆழத்தைக் காட்டும் (அளவுக்கல்)

சிக்கல் குத்துமா’  என்பதில் ‘மாதம் (ஒரு மாதத்தின் பெயர்)நீக்கவும்

 

10 சேவகனா? ஸ்வரம் சேர்த்து நகைப்பாயா? (5)

விடை. ‘நகைப்பாயா’ என்பதன் வேறு சொல்.

சேவகனா’ என்பதன் வேறு சொல்+ ஒரு ஸ்வரம்

 

13 உயிரதில் மாறி மாறி வந்த கருவி (3)

விடை. ஒரு கருவியின் பெயர்

உயிரதில்’ என்ற சொல்லின் உள்ளேயே மாறி மாறி உள்ளது

 

15 சூசை கையில் ஜாடை காட்டு (2)

விடை குறிப்பின் உள்ளேயே உள்ளது

**************

 

இதன் ஆசிரியர் திரு பார்த்தசாரதி கர்நாடக இசை, குறுக்கெழுத்து, கணினி, கிரிக்கெட், டென்னிஸ் இவற்றின் தீவிர ரசிகர். குறுக்கெழுத்தில் தன் குரு என இவர் குறிப்பிடும்  திரு பி.வாஞ்சிநாதன் சென்னை கணக்கு நிறுவனத்தில் விஞ்ஞான அதிகாரியாகப் பணியாற்றுகிறார் (Scientific Officer, Chennai Mathematical Institute). திரு பார்த்தசாரதி கர்நாடக இசை பற்றி இரண்டு புத்தகங்களும் (108 Divya Ragams & 108 Cine Ragams) ரயிலவே பற்றி ஒரு புத்தகமும் (Romance of the Railways) எழுதியுள்ளார். இவரது 108 Divya Ragams படித்த பின் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் இவரையும் இவரது மனைவி அம்ருதாவையும் செப்டம்பர் 2005- ல் தன்னுடன் தேநீர் பருக ராஷடிரபதி பவனுக்கு அழைத்தார். டாக்டர் கலாமுடன் 20 நிமிடங்கள் இருந்ததை மறக்கவே முடியாது என்கிறார்கள் இத்தம்பதிகள்.திரு பார்த்தசாரதி சென்னை பி.எஸ்.உயர்நிலைப் பள்ளி, விவேகானந்தா கல்லுரி மற்றும் கிண்டி பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர். பி.. பட்டம் பெற்றபின் ‘சிவில் சரவீஸஸ்’ தேர்வு முலம் இந்திய ரயில்வே கணக்குப் பணி (IRAS) அதிகாரியாக 1970-ல் நியமிக்கப் பட்டார். இந்தியாவில் பல இடங்களில் பல பதவிகளில்பணியாற்றி இருக்கிறார். இவற்றில் குறிப்பிடத் தக்கவை

·         முனைவர், ரயில்வே அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி (Professor, Railway Staff College, Vadodara))

·         நிதி ஆலோசகர் பாபா அணு ஆராய்ச்சி நிலையம் (IFA/BARC, Mumbai):

·         நிதி அங்கத்தினர் கதர் மற்றும் கிராமத்தொழில் ஆணையம் (Member,Finance,KVIC, Mumbai)

·         கோட்ட ரயில்வே மேலாளர், தின்சுகியா (அசாம்) (Divisional Railway Manager,Tinsukia)

·         நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அதிகாரி, ரயில் பெட்டி தொழிற்சாலை, பெரம்பூர் (FA & CAO, ICF, Perambur)

·         நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அதிகாரி, மத்திய ரயில்வே, மும்பை & தென்னக ரயில்வே, சென்னை (FA & CAO, Central Railway, Mumbai & Southern Railway, Chennai)

·         தொழில் நுட்ப அங்கத்தினர், ரயில்வே உரிமைக் கோரிக்கைத் தீர்ப்பாயம், சென்னை (Member, Technical, Railway Claims Tribunal, Chennai)


பணியிலிருந்து ஓய்வு பெற்ற இவர் பெங்களூரில் வசிக்கிறார்.

*************